புதன், 18 பிப்ரவரி, 2009

விழியில் நனையும் உயிர்

காலை எழுந்தவுடன் படிப்பு -பின் 
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
பாரதி....
உன் கவிதையின் முதல் வரி 
மோசம் போனது 
அந்த பள்ளியின் 
மூன்றாம் மாடியில்.

தாயின் 
கருவறை சூடே 
இன்னும் காயாத 
மழலைகளை 
கரித்து போட்டது
கொளுந்து தீ.


பள்ளிக்கு கிளம்பிய 
காலையில் 
நீங்களிட்ட 
எச்சில் முத்தங்களின் ஈரம் 
தீ சுட்ட  
முத்திரை ஆனது 
தாய்மையின் கன்னத்தில்.

சிம்னி விளக்கும் 
சுட்டுவிடுமென 
சீண்ட விட்டதில்லையே உன்னை.,
தீ நாக்கு சுடத்தான் 
சிலேட்டு பையோடு 
போனாயோ பள்ளிக்கு..?
ஒரு குடிசையிலிருந்து 
காற்றில் கலக்கும் ஒப்பாரி.

முத்தம் அள்ளி தந்து..
கை அசைப்பில்கதை சொல்லி
விடைபெற்று போனீர்கள்..
விண்ணிலிருந்து 
கண்சிமிட்டும் 
விண்மீனாய் ஆனீர்கள்.

கூடி விளையாடத்தானே 
கூப்பிட்டான் பாரதி..
இப்படி 
கூடி எரிந்ததென்ன 
காவிய கண்மணிகள்.

தாய் மடி சூடும்
தாலாட்டு பாட்டும் 
பருப்பு சோறும் 
மழலையும் 
முத்து சிரிப்புமென 
மலரா மொட்டுக்களை 
வீட்டிலிருந்த்து 
பள்ளிக்கு அனுப்பினோம்..,
பள்ளியோ 
பாடைக்கு அனுப்பியது.

பொசுங்கிய 
பொக்கிஷத்தில்..
எத்தனை விஞ்ஞானிகள்..
எத்தனை மகாத்மாக்கள்..
எத்தனை தெரேசாக்களோ..
எவர் கண்டார்..?

இனியும் வேண்டாம் 
இப்படியொரு 
மீளாத்துயர்..,
ஆறாமலும்..
ஆற்ற முடியாமலும் 
வலியில் 
எம் நெஞ்சங்கள்.

1 கருத்து:

rahini சொன்னது…

ஒவ்வொரு கவிதையும் உயிர் நாடி போல் உள்ளது வாழ்த்துக்கள்
அன்புடன்
ராகினி
germany

கருத்துரையிடுக

Recent Comments