புதன், 18 பிப்ரவரி, 2009

நாட்டு நலம்

கடத்தல் காரனின் 
கால் செருப்புக்கு 
மெருகு போடுகிறான் 
உண்மை உழைப்பாளி.


குரங்கு தின்ற மீத 
நாவல் கனிக்காய்
கொடும் பசியோடு 
மரத்தடியில் காத்திருக்கிறாள் 
ஏழை சிறுமி.

கோவில் செல்கையில்..
உண்டியலுக்கும் 
பிச்சைக்கார அலுமினிய பாத்திரத்துக்கும்..
ஓரே பத்து பைசா ஓதுக்கீடு.




அனைவருக்கும் கல்வியென
ஆர்ப்பரிக்கும் அரசு.,
வேலை இன்றி 
பரி தவிக்கும் 
பட்டதாரி.

எட்டு பிள்ளைகளை 
ஊர்மெச்ச வளர்த்தெடுத்தும்..
பட்டதாரி பிள்ளைமாருங்க 
பட்டணத்து பாட்டியை 
கொண்டு சேர்த்தது..
அனாதை இல்லத்திலதான்.

மூன்று பிள்ளைகளுக்கு பிறகும் 
வரதட்சணை வழக்கு 
தீராத வீடுகளில் 
நல்லாத்தங்காள்களை காப்பாற்ற
கிணறுகளை..
மனிதாபிமானம்தான் மூடணும்.




சுதந்திர நாட்டில் 
உழைப்பை சுரண்டுபவர் 
மாளிகையில்.,
உழைப்பவர்க்கோ 
மண்குடிசை.

வெடிகுண்டுகளிடம் 
ஓயாமல் 
தோற்கிறது 
மனித நேயம்.

இயற்கை சீற்றத்தின் 
இறுதி நீதி..,
பணம் காக்கவில்லை 
உறவுகள் வரவில்லை
உயிரை மீட்க,
முதலாளிக்கும் தொழிலாளிக்கும் 
அடைக்கலம் கொடுத்தன 
சமத்துவ முகாம்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Recent Comments