ஞாயிறு, 20 டிசம்பர், 2009


குறுகிய இரவின்
நீண்ட நேரப் பயணத்தில்,
கனவுகளால் பறிக்கப்பட்ட
உன் நினைவுப் பூக்களை
வழியெங்கும் வாரியிறைத்தபடி.....
வழித்தடம் அறிந்து
வந்திடுவாய் என்ற
நம்பிக்கையில்,
விடியலின் மேற்திசையில்
இந்த சீதை........

வியாழன், 19 பிப்ரவரி, 2009

அர்ச்சுனன் தவம்


மல்லையின் மலைகளிலே 
மைந்தனாய் எண்ணப்படும் 
அர்ச்சுனன் தவம் 
இருபத்தேழு மீட்டர் நீளம்
பன்னிரண்டு மீட்டர் உயரம் 
கொண்டு 

காலைப்பொழுதில் 
செம்பரிதியின் செங்கரங்கள் 
தன்னைத் தழுவ 
நிமிர்ந்த நன்னடையும் 
நேர்கொண்ட பார்வையுமாய் 
பாரதி கண்ட புதுமை பெண்ணை 
பாருக்கு உணர்த்திடும் வண்ணம்
கம்பீரம் காட்டுகிறது
இந்த அர்ச்சுனன் தவம்.

மானிடர்க்கு உண்டாம் 
ஐம்புலன் 
இந்த மைந்தனுக்கோ 
நூற்று ஐம்பத்து மூன்று புலன்கள்.

மனிதனின் கற்பனையை மிஞ்சிய 
எத்தனையோ 
உருவங்களைத் தன்னுள்கொண்டு 
அனைவரையும் ஆழ்த்துகிறது 
வியப்பில்.

ஏட்டில் உள்ள 
மகாபாரதத்துக்கு 
போட்டியாய் 
உருவங்களை 
காட்சிப்படுத்தி செதுக்கி 
மலைக்கவைத்துள்ளனர்.

கானக சமுதாயத்தின் 
கவின்மிகு கோலம் 
யாவும்..
கற்சிலைகளாய்.

கொண்டவளின் அன்புக்காக 
ஒரு தாஜ்மஹால்.,
ஆண்டவனின் அன்புக்காக 
ஒரு பிரகதீஷ்வரர் ஆலயம்.,
இப்படி காரணம் கொண்டு  
உருவான கட்டிடங்களூக்கு 
மத்தியில்..
பாறையில்  
உளிகள் உருகொடுத்த 
இராஜ முத்திரைகள் இவை.



 


விதியை நொந்து 
விரக்தியின் விளிம்பில் 
விம்மி அழுவோர்க்கு 
வேறுபாடின்றி 
வினை தீர்க்கும் 
விஷ்ணுபெருமானின் 
குடியிருப்பு  கோவிலும்

மண்ணில் பிறந்த மனிதன் 
மனதை நிலைப்படுத்தி 
ஆண்டவனை அடையாள்ம் காண 
காடு மலைகளில் 
தன்னை மறந்து தவமிருக்க 
 
இதிகாசங்களில் 
இரண்டாவது மைந்தன் 
அர்ச்சுனன் அஸ்திரம் பெற
பன்னிரண்டு ஆண்டுகள் 
தன் விலா எலும்பு தெரிய 
ஒற்றைக் காலில் நின்று 
தாமரை மொட்டு போல் 
தவம் செய்யும் காட்சியும் 
 
அவரோடு இணைந்த 
மகரிஷிகள் 
தங்கள் தாகங்களை 
த்யக்கமில்லாமல் 
தாரைவார்த்து 
தளர்ந்த மேனியின் 
எலும்புகள் எத்தனிக்க 
பெருக்கல் குறிகாட்டும் 
கால்களோடு  நின்று..
பங்கு கேட்க்கின்றனர் 
அஸ்திரத்தில்.

சித்தம் தெளிய 
சிந்தை பொலிய 
அவனியில் ஆண்டவன் 
பெருமையை பேச 
சிவனின் வலதிடதாய் 
பானுவும் மதியும் உதயம்.

தாண்டவ மூ்ர்த்தியின் 
சிரசு தாரகை 
கங்கை 
இந்த மலையின் நடுவில்  
பாய்ந்தோடியதாய் ஐதீகம்.

நெடும் பயணக் களைப்பில் 
இந்திரனின் ஐராவதம் 
கங்கையில் 
தாகம் தணிய 
தன் சேயுடன் நிற்கும் காட்சி 
தத்ரூபம்.

சுட்டுவிரல் 
மற்றும் நடுவிரலின் 
விரிந்த வடிவம் காட்டி நிற்கிறது  
இந்த மலையின் மையம்.
அதில் மகிழ்ந்தாடும் 
ஐந்து தலை நாகா 
மூன்று தலை நாகினி 
தமையனாய் 
நாகேந்திரன்.

பிறர்க்கென வாழ்தலில் 
உறுதி கொள்ளும் 
பகீரதன் 
முன்னோர் பிழைக்க 
பங்கற்கிறார் தவத்தில்.

பாண்டவர்க்கு 
பக்தியை 
பண்பை
பயிற்றுவித்த 
குரு துரோணரையும் 
நினைவுகூறுகிறது 
இந்த பாறை.

தேவலோக தேவரையும்..
பூலோக மானிடரையும் 
வடித்த பல்லவர்கள் 
ஆதிகால 
விலங்குகளையும் விட்டு வைக்க வில்லை 

மங்கையின் மகிழ்ச்சி 
துள்ளலுகு 
மாதிரி காட்டும் 
கவரிமான் 
தன்னழகு காலால் 
மூக்கு சொறியும் காட்சி 
இயற்கையிடம் 
இனாம் கேட்பது போல் உள்ளது.

பாரதத்தின் பெருமகன் 
பண்டித நேருவின் 
பாக்கியப்புதல்வி 
மல்லைக்கு வந்த 
பொழுதொன்றில் 
அவர் கண்களை கவ்விய 
பெருமை 
இந்த மானுக்கு உண்டு.

அம்மானின் உருவை 
பாரத் தேசத்தின் 
பத்து ரூபாய் தாளில் 
பதிப்பித்து 
பல்லவன் பெருமையை 
பாருக்கு சொன்னதும் 
அவரேதான்.

பெரியோரின் பெருமைக்கு 
மதிப்பளித்து 
பின்பற்றும் மனிதர்கள் மத்தியில் 
தன் இரையான 
எலியை கவர இயலாமல் 
அர்ச்சுனனைப்போல் 
முன்னங்கால் மேலுயர்த்தி 
மோன தவமியற்ற 
பூனை உருவை 
சிலையென நம்பி 
அருகில் சென்ற எலியை 
கண்ணிமைப்பொழுதில் 
கவ்வி கபளீகரம் 
செய்ததால் 
வயிறு புடைத்திருக்கும் காட்சி
அற்புதம்.



 
 
குரங்குகள் இரண்டு 
பேன் பார்கும் காட்சி 
குதூகலம்.

பல்லவன் 
கூடிவாழும் மாண்பின்பை 
உணர்த்தவே 
செதுக்கிவைத்தானோ 
மந்தி உருவத்தை..?

பொன்னான வாழ்வு 
பொருள் தேடலில் கழிவதால் 
இளைப்பாறல் 
இங்கு இல்லாமல் போனது.
களைப்பை போக்க 
கைக்கொண்ட முறைதான் 
பேன் பார்க்கும் சூட்சுமம்.

பெண் குரங்கு பார்த்தால் 
பொதுபோக்கு எனலாம் 
இங்கு ஆணு்ம் பார்ப்பதால் 
ஆணும் பெண்ணும் 
அன்பாய் வாழும் 
பண்பைக்காட்ட 
பல்லவன் வடித்த 
வாழ்க்கை சித்திரம்.

ஐந்தறிவானாலும் 
ஆறாத அன்போடு 
அவனியில் வாழும் 
ஆறறிவு மாந்தரெலாம்..
குரங்காய் இருந்து பின் 
மனிதரான 
நிஜம் நிலைக்க 
குட்டிக்கு பாலூட்டும் 
பாங்கான காட்சி.






பஞ்ச பாண்டவர் பள்ளி அறை

கிருஷ்ண மண்டபத்துடன் 
தொடர்புடைய 
மற்றொரு மண்டபம் 
பஞ்ச பாண்டவர் பள்ளியறை..

சிம்ம ராஜாக்களின் 
சின்னமாய் அமைந்த 
சிங்கமுகத் தூண்கள் 
இம்மண்டபத்தையும் வியாபித்துள்ளது.

முடல நர்சிம்ம வர்மன் 
வீரத்தில்வியந்து போன 
சாளுக்கிய மன்னன் 
இரண்டாம் புலிகேசி 
திறமையிட கொண்ட நம்பிக்கயை 
இமாத்தின் உச்சியில் 
போரிட்டும்,
தன் வெரத்த்தை விதவை ஆக்கி 
அவரிடம் தோற்றுப் போனார். 

இவர்களின் புரட்சியின் 
புரையோடலில் 
புலம்பியழுது 
தனை முழுமையாக் 
அலங்கரித்த்க்கொள்ளவில்லை 
இம்மண்டபம்.

மண்டப மத்தியில் 
மமதையில் நிற்கும் 
அறையின் தோற்றம் 
சைனக் கட்டிடப் பாணியை 
பதித்துள்ளது.

ஆனாலும் 
பாடசாலை செல்லா 
பாமர மக்களின்  
புதுமையான சிந்தனைக்கு -இவை 
புதுமண்ப்பெண்ணின் 
புன்னகையைப் போன்று 
பூத்துவிடத் துடிக்காத 
தாமரை மொட்டின்
சாயல் தோன்றும்.

கலைநயம் 
கண்களில் சுமந்த 
பல்லவர்கள் 
பாறையை உடைப்பதிலும் 
கையாண்டுள்ளனர்
புது யுக்திகளை.

கற்பனையும் கலைநயமும் 
காவியம் பாடுவதால் -இங்கு 
பஞ்சு மெத்தையும் 
பட்டு விரிப்பும் 
காணாமல் போனதோ -இந்த 
பாண்டவர் பள்ளியறையில்.

  

அழியாச் சின்னங்கள்

வானம் எட்டிப் பார்க்க
மேகம் குடைபிடிக்க 
அண்ணாந்து பார்த்தால் 
இயற்கை அன்னையின் 
இருப்பிடமாய் 
எழில் கொஞ்சும் மலைகள் 
மரம் செடி கொடிகளுடன் 

பல்லவர்களின் திறமைகளை மக்கள் 
காணாமல் அறிந்திருக்க-இங்கே 
அவர்களில் கற்பனைக்கு 
விருந்தாக அமைந்துள்ளவை 
மாமல்லபுரத்தின் சிற்பங்கள்.

ஆறாம் நூற்றாண்டில் 
ஆண்டு அழிந்தார்கள் 
பல்லவர்கள் 
என்றால்..அது பொய்..

அழிந்துபோன மனிதனால் 
அற்புதமாய் வடிக்கப்பட்ட 
அழியாச் சின்னங்கள்- இன்று 
நம்மிடையே கம்பீரமாய் 
நிமிர்ந்து நிற்கின்றது.

மல்லையின் மணலிலே 
கால் பதித்தவுடன் 
காந்தவிசைக்குக் கட்டுப்பட்டாற்போல் 
மக்களை இழுத்து செல்வது 
மலையின் மேற்கில் அமைந்துள்ள 
கிருஷ்ண மண்டபம்.

மலையை குடைந்து 
மனதை மயக்கிடும் வண்ணம் 
மாபெரும் மண்டபத்தை 
உருவாக்கின பல்லவர்கள் 
இந்த குடவரை கோவிலுக்கு 
கிருஷ்ண மண்டபம் எனப் 
பெயர் சூட்டி மகிழ்ந்தனர்..

நரசிம்ம வர்மன் 
இராஜசிம்மன் 
இருவரின் பெயர் பொருத்தம் 
கொண்டவை 
அம்மண்டப்த் தூண்கள்..

குகைகுள் குடிய்ருக்கும் 
சிங்கத்தின் உருவத்தை 
குடைந்தெடுத்த தூண்களில் 
சிற்பமாக செதுக்கி 
நம்மை திகைக்க வைத்துள்ளனர்..

தாய்மொழி மீது 
தணியா தாகம் கொண்ட 
பல்லவர்கள் 
அம்மண்டப்த்தில் 
பாலிமொழி எழுத்துக்களை 
பாங்காய் வடித்துள்ளனர்..

புவியில் பூத்து 
புதுவழியில் புரண்டு 
புது நெறிகளை புஷ்பித்த 
 பூர்வீக புகழின் புண்ணியமூர்த்தி 
புத்தபெருமானின் 
கலாச்சாரத்தையும் 
காட்டி நிற்கிறது 
கிருஷ்ணமண்டபம்..

பாசத்தை பாலாய் பொழியும் 
பசுவினை சிசுவாய் எண்ணி 
பசுவின் உருவத்தை 
கிருஷ்ண மண்டபச் சுவர் 
தத்தெடுத்துள்ளது.

பசுவிடம் பால் கறப்பது 
பகவான் கிருஷ்ணன் 
என்பதைக் காண்கிறோம் 
ஆனால்..
அவர் தலையில் இருக்கும் 
புத்த மகுடம்தான் 
புரியாத புதிராய் 
நம்மை பிரம்மிக்க வைக்கிறது..

தாயின் நிழலில் 
தவமிருக்கும் 
சேயின் உருவம் 
நிஜத்தை தோற்கடிக்கின்றது..

எகிப்தின் பெருமையை 
பிரமீடுகள் சொல்ல் 
அதன் சாயலும் 
பிரதிபலிக்கின்றது 
இம்மண்டப சுவரில்.

மனித முகத்தையும் 
சிங்க உடலையும் கொண்ட 
இவ்வுருவம் 
பல்லவ எகிப்திய 
உறவை பறை சாற்றுகின்றது.

அயல்நாட்டவர் அறிய 
 
"ஸ்விங்க்ஸ்" என்பர் 
இந்த அதிசய உருவத்தை.

"கலைத்திறன் மிக்கவன் 
காலத்தை வெல்வான்"
என்ற சொல்லை 
உண்மைய் ஆக்கியது 
மற்றுமொரு அதிசயம்

ஒரெ வடிவத்தில் 
இரண்டு உருவங்க்ள் 
யானையை பார்த்தால் 
பசு இல்லை 
பசுவை பார்த்தால் 
யானை இல்லை
 


அடுக்களை விட்டு விடுதலையாகி 
புமி நோகா வண்ணம்
புல்கட்டு சுமந்து 
புது்பொலிவோடு 
வருகிறாள் ஆயர்மகள்..

செயற்கைக் குடையொன்று 
இயற்கைக்கு ஈடுதராதென 
கோவர்த்தன மலையையே 
குடையாகப்பிடிக்கின்றான் 
குழலூதும் கண்ணன்

மரங்களின் சிரங்களை 
சர்மாரியாக வெட்டி வீழ்த்திய 
வேகத்துடன் 
கட்டிய விறகும் 
வெட்டிய கோடாரியுமாய் 
வீதியிலே வருகிறான் 
ஆய்ர்குல மகன் 

தனக்கு மிஞ்சியே 
தானம் என்பது 
தற்கால  தர்மம் 
கறந்த பாலினில் கலப்பின்றி
உறைந்த தயிரை 
ஊருக்கு வழங்கிட 
உற்சாக நடையுடன் 
ஊர்லம் வருகிறாள் 
ஆய்ர்குடிப் பெண்.   
காலையில் சென்றவர்கள் 
கடமைகளை முடித்துவிட்டு 
கன்னியரின் கயல் கண்கள் 
கானம் பாடியதோ என்னவோ 
காற்றுவாக்கில் 
அந்தி வந்ததும் 
காத்திருந்தவர்கள் 
துணைவியரை எண்ணி 
துள்ளியோடி வருகிறார்கள் 

புதுமண த்ம்பதியருக்கே உரிய 
புது தெம்போடு 
புது மலர் சூடி 
களிறோடு வரும் பிடியினைப் போல் 
களிப்போடு வருறார்கள் 
அன்னமென அவள் நடக்க 
அவன் அவள் கை பிடித்து 
வயதை வயோதிகத்துக்கு  
தந்துவிட்டு 
இளமை கூட்டத்தில் 
இவர்களும் ஓர் நடைப்பயணி...

வானம் பொய்த்து விட்டால் 
வறுமைக்கு கொண்டாட்டம் 
பின்னால் திண்டாட்டம் 
வேண்டாமென 
வருணனை வேண்டி 
வரவிற்காய் காத்திருக்கின்றனர்.

ஆயர்களின் வாழ்க்கையை 
அணு அணுவாய் அனுபவித்து 
நேரில் கண்டவர்போல் 
நினைவுச்சின்னம் அமைத்திருக்கும் 
பல்லவனின் 
கலைத்திறனை 
என்னவென சொல்ல..?
 

கல்லும் கவிபாடும் கடல்மல்லை




கல்லும் கவிபாடும் கடல்மல்லை
மன்னர்களின் சாம்ராஜ்ஜியம் 
முடிந்துவிட்ட தமிழகத்தில் 
பல்லவனின் பெயர் சொல்லும் 
"மாமல்லபுரம்"

சாளுக்கியணை வென்று 
வாதாபியில் அரியணை ஏற்று 
மல்லர்களின் ஆட்சிக்கு 
முற்றுப்புள்ளி வைத்த 
முதலாம் நரசிம்மனின் 
சிறப்பு பெயரே 
"வாதாபி கொண்டான் மாமல்லன்"

இந்த மாமல்லனின் 
நினைவுசின்னமே 
இன்றைய 
"மாமல்லபுரம்" 
 
பல்லவனின் தலைநகராம் 
காஞ்சிமாநகரின் 
துறைமுகப் பட்டினமே 
இந்த மாமல்லபுரம்.


காஞ்சிக்கு கிழக்கில் 
வங்கத்தின் மேற்கில் 
பாண்டிக்கு வடக்கில் 
சென்னைக்கு தெற்கில்.

இறந்தகால பிரதேசத்தில் 
ஒளிந்து நின்று 
காலத்தால் அழியாப் புகழ் சூடி
வரலாற்று சுவட்டில் 
தடம் புரளா
தடைக்கல்லாய் 
நிலைத்து நிற்கும் 
"கடல் மல்லை"
கலைகள் அழியாது 
காவியம் பாடி நிற்கும் 
கடல்கொள்ளப்படா 
சிலை மல்லை.

 

இந்த மல்லையின் மகிமையும் 
சிற்பங்களின் கலை நுணுக்கமும் 
காண்கையில்.,
பல்லவ சிற்பிக்குக் 
கண்கள் இரண்டல்ல 
விரல் நுனி பத்திலும் 
பதினாயிரம் கண்களே
என தெரியும்.

பல்லவனின் கலைக் கண்ணாடியில் 
முகம் பர்ர்த்து மகிழ 
நாமும் பிரவேசிப்போமா
இக்கவிதை ஏட்டிற்குள்...

சிற்பியின் கவிதை மாமல்லபுரம்-நூல் காணிக்கை



எல்லோருக்கும் 
உடலில்தான் 
இதயமிருக்கும் 
இதயமே 
உடலாய் பெற்ற 
என் அம்மாவிற்கு 
இந்த 
கவிதை நூல் 
சமர்ப்பணம்.

புதன், 18 பிப்ரவரி, 2009

துளிகள் சேரட்டும்

பிறந்த மகிழ்வில் 
இரவு முழுதும் 
உருண்டு திரண்டு 
புல்நுனிக்குள் 
பதுங்குகிறாய் 
பனித்துளியே..
விடிந்ததும் 
உன்னை 
விரட்டி துரத்த 
கிரண சாட்டையோடு 
உஷ்ணமாய் 
வருவான் 
அந்த சூரியன்.


அதுவரை 
உன் ஆயுளின் 
அந்திமத்துக்காய் 
உனக்கென 
நான் இசைப்பேன் 
ஒரு கானம்.

கேட்டு தலை ஆட்டி 
நீயும் 
துடைத்தெடு 
என் கண்ணீர் முத்துக்களை.


நாம் இருவர்


யார் சொன்னது 
நான் தனி மரமென்று..?
ஒவ்வொரு இரவிலும் 
எனக்காய் காத்திருக்கிறாய் நீ.

மொட்டைமாடியில் 
உன்னோடு உரையாடுவதும் 
காதல் கீதமிசைப்பதும் 
யாருக்கு தெரியும்..?

பிரிவற்ற உறவுக்காய் 
ஒப்பந்தமிட்டிருக்கிறோம் நாம்.

எட்ட இருந்து 
வட்டமிடும் 
வெண்ணிலாவே..
எப்போது நீ என் 
கிட்ட வருவாய்..?

இனியும்


தட்டினால்
பால் பாக்கெட்.
தட்டினால் 
பணம்.
தட்டினால் 
தேனீரும் காபியும்.
தட்டினால் 
டிக்கெட்
தட்டினால் 
எல்லாம் 
கிடைக்க  
பட்டன் தட்டினால் மட்டுமல்ல 
பாதாளம் வரை தோண்டினாலும் 
கிட்டவில்லை தண்ணீர்.

சிறைவாசம்

பொத்தி வைக்க முடியவில்லை
கை பிடிக்குள் அடங்கவில்லை 
நொடி நேர சிறைவாசம் 
அதே நொடிக்குள் விடுதலையும் 
பழிவாங்காமல் 
எனக்குள் வந்து போ காற்றே 
வாழவேண்டும் நான்.

உயிர் பெரிது


"மாலை வரும்போது 
சாக்லெட் பலூன் கேக் 
எல்லாம் வாங்கி வாப்பா 
நான் வாசலில் காத்திருப்பேன்"
அதிகாரியின் மகள்.



"சாயங்காலம் வரும்போது 
எனக்கு ஒன்னும் வாணாம் 
நீ மட்டும் 
பத்திரமா 
திரும்பி வாப்பா 
நான் கடலோரத்திலேயே 
காத்திருப்பேன்"
மீனவனின் மகள்.

உம்மவளும் மருமவதான்


தங்கச்செல போல
மணப்பொண்ணு 
விருந்தாளிங்க கூடி நிக்க 
கெட்டி மேளம் கொட்ட 
வெரசா முடிஞ்சது 
நெல்லைசீமையில கலியாணம்.

மறாநா காலையில 
சீதன்ப்பொருள 
பிரிச்சு பார்த்து 
அதிர்ச்சியானா மாமியா..

வார்த்த சுத்தம் நழுவிட்டு 
பொண்ணுவீட்டா 
கொடுத்தால 
கொறையோடில்ல இருக்கு..?

கேட்டிருந்தாப்புல 
வெள்ளிசெட்ட காங்கல 
சொன்ன வாக்க காக்க்ல 
ஏ புள்ள 
ஒங்கொப்பனுக்கு 
புத்தி வரட்டும் 
நீ அங்கனயே போயி கெட.

மருமவள் கொண்டு போயி 
விட்டுட்டு 
வீடு திரும்பின 
மாமியா காரிக்கு 
காத்திருந்துச்சி அதிர்ச்சி.

கேட்ட நூறு பவுன்ல
பாதிய தங்கமாவும் 
மீதிய மாத்தாவும் 
போட்டாகள்ல..
பெத்த மவளுக்கு.., 
அவ மாமியா 
வெரட்டிவிட 
பொறந்த வீட்டுக்கு 
வந்திருக்கு பொண்ணு.

நிஜத்தில் எப்போது..?


உக்கிரமாகிறது உணர்வுகள் 
என் மனதில் 
நீ உதித்த நாள் தெரியவில்லை.

கடக்கும் இரவில் 
என் மூடா விழிகளுக்கு 
பால்நிலா
வாசிக்கிறது 
வரவேற்பு வாசகம்.

புன்னகையுடன் 
உன் கூந்தலுக்காய் 
பிச்சிபூக்கள் 
காத்து கிடக்கிறது.

பாதுகாத்த 
உன் பாதசுவட்டில் 
கண்ணாடியாய் 
தினமும் என் முகம் பார்க்கும் 
பரதன் நான்.

வானத்தை கிழித்து 
நீல வண்ண பாவாடையும் 
வானவில்லை வளைத்து 
மேலாடையும் தைக்கிறேன் 
உனக்கு.

ஒரு எச்சரிக்கை 
பூக்கள் 
காயப்படுத்த கூடும் என்பதால் 
நாளை முதல் 
நீ பூ பறிப்பதை தவிர்ப்பது நல்லது.

தோட்டத்து பூக்களின் 
வாசமெல்லாம் 
உன்னிலிருந்து 
நீ கிள்ளி கொடுத்த 
கடன்.

வா காதலி 
நாள் குறிப்போம் 
மணத்திற்கு. 

எந்த கிரகத்தில் நின்று 
கட்டட்டும் தாலி.,
தேனிலவுக்கு 
எங்கே போகலாம் சொல் 
செவ்வாயோ வியாழனோ..
எதுவும் சரி எனக்கு.

நம் தனிக்குடிதனத்தில் 
நீ சமைக்க வேண்டாம்.
உன் கைவிரல் பாடுகள் 
கிழித்துவிடும் 
என் இதயத்தை.

நிலாவில் உனக்கொரு வீடு 
விருந்தாளிகளாய் 
விண்மீன் கூட்டம்.

மாலை நேர 
சூரியனை சுரண்டி 
செந்தூரமாய் இடுவேன் 
உன் நெற்றியில்.

நான் தொட்டு சுருங்காத 
என் முதற் பூவே 
எப்போது நீ
நிஜத்தில் வருவாய்..? 

மாற்றம்


ஆறரை மணிக்கு பிருந்தாவனம் 
ஏழு மணிக்கு வரம் 
ஏழரைக்கு மெட்டி ஒலி 
எட்டரைக்கு நீ நான் அவள் 
ஒன்பது மணிக்கு அலைகள் 
ஒன்பதரைக்கு அண்ணாமலை 
இப்படி மகிழும் பாட்டியோடு 
உலக கோப்பை கிரிக்கெட்டுக்காய் 
பேரனின் சண்டை
மூத்த தலைமுறை 
விட்டொதுங்க 
விளம்பர இடைவெளியில் 
பாட்டிக்கு 
கிரிக்கெட் வகுப்பெடுத்தான் பேரன்.
கங்லியின் சிக்ஸருக்கு 
கை தட்டினாள் பாட்டி.
அடேங்கப்பா என்றான் பேரன்.

கவனம்


புகுந்த வீட்டின் 
கொடுமை கூறி 
அழுத மகளுக்கு 
ஆறுதல் கூறிய தாய் 
முன்னிருக்கையில்.

மேலதிகாரி 
எப்படிப்பட்டவரோ..
வேதனையில் 
இரு ஊழியர்கள் 
பின்னிருக்கையில்.

நறுக்கிய காய் 
கை நழுவி 
கையையே நறுக்கிக்கொண்ட 
வாலிபப்பெண் எதிர் பக்கம்.

இடையிடையே
குழந்தைகளின் அழுகுரல் 
இளைஞர்களின் அரட்டை
குமரிகளின் சிரிப்பு 
புலம்பல் பாட்டி

எல்லோருக்குமான 
பேருந்தில் 
என்னை நான் மறக்க 
இதோ சில நிமிடங்கள்.

இருப்பினும் 
மனமொன்றவில்லை முழுதாய் 
நடத்துனர் 
தரவேண்டிய 
ஐம்பது பைசாவில் இருக்கு 
என் கவனம்.


கோலாகலம்

திருவிழா நிமித்தம் 
அலங்காரமாய் 
கிளம்பிய 
அம்மன் தேரும்..,

திருமண நிமித்தம்..
ஊர்வலமாய் 
கிளம்பிய..
அக்காளின் ஜானவாச காரும்..,
பழையபடி திரும்பின 
அதனதன் நிலைக்கு.




அலங்காரமிழந்த 
அம்மன் 
கருவறைக்குள்..,
என் அக்காளோ..
ஆம்படையான் 
கைப்பிடிக்குள்.

கோலாகலத்துக்கு பிறகான 
அலங்கோலத்துக்கு 
கட்டிய காப்பும் 
மிதித்த அம்மியும் 
பார்த்த அருந்ததியும் 
கை கொட்டி சிரிக்குது 

நாட்டு நலம்

கடத்தல் காரனின் 
கால் செருப்புக்கு 
மெருகு போடுகிறான் 
உண்மை உழைப்பாளி.


குரங்கு தின்ற மீத 
நாவல் கனிக்காய்
கொடும் பசியோடு 
மரத்தடியில் காத்திருக்கிறாள் 
ஏழை சிறுமி.

கோவில் செல்கையில்..
உண்டியலுக்கும் 
பிச்சைக்கார அலுமினிய பாத்திரத்துக்கும்..
ஓரே பத்து பைசா ஓதுக்கீடு.




அனைவருக்கும் கல்வியென
ஆர்ப்பரிக்கும் அரசு.,
வேலை இன்றி 
பரி தவிக்கும் 
பட்டதாரி.

எட்டு பிள்ளைகளை 
ஊர்மெச்ச வளர்த்தெடுத்தும்..
பட்டதாரி பிள்ளைமாருங்க 
பட்டணத்து பாட்டியை 
கொண்டு சேர்த்தது..
அனாதை இல்லத்திலதான்.

மூன்று பிள்ளைகளுக்கு பிறகும் 
வரதட்சணை வழக்கு 
தீராத வீடுகளில் 
நல்லாத்தங்காள்களை காப்பாற்ற
கிணறுகளை..
மனிதாபிமானம்தான் மூடணும்.




சுதந்திர நாட்டில் 
உழைப்பை சுரண்டுபவர் 
மாளிகையில்.,
உழைப்பவர்க்கோ 
மண்குடிசை.

வெடிகுண்டுகளிடம் 
ஓயாமல் 
தோற்கிறது 
மனித நேயம்.

இயற்கை சீற்றத்தின் 
இறுதி நீதி..,
பணம் காக்கவில்லை 
உறவுகள் வரவில்லை
உயிரை மீட்க,
முதலாளிக்கும் தொழிலாளிக்கும் 
அடைக்கலம் கொடுத்தன 
சமத்துவ முகாம்கள்.

பலி


அன்றொரு நாள் 
மருத்துவமனையில் 
அவளுக்கும் 
பட்டியில் தவித்த 
ஆட்டுக்கும் 
நிகழ்ந்தது 
ஒரே நாளில் பிரசவம்.

ஆண் பிள்ளையும் 
ஆட்டுக்கிடாவும் 
வளர்ந்து களித்த 
மூன்றாமாண்டு முடிவில்.,
அய்யனாரப்பனின்..ஆசியுடன் 
வெட்டப்பட்டது 
கடாவின் கழுத்து.

பிள்ளையின் 
நல்வாழ்வுக்காய் 
உயிர் ஈந்தது ஆடு. 


காற்றடைத்த பை

பம்பின் 
வெற்றிடத்தில் 
காற்று நிரம்ப 
புஜம் அதிர 
நெஞ்சுக்குள் 
காற்றை உள்ளிழுத்து..
சைக்கிள் டய்ர் குவிய 
காற்றடிக்கும் 
அந்த சிறுவனின் 
வயிறு 
குழிந்தே கிடக்கிறது.
 


 ஆயிரம் ட்யூபுகளுக்கு 
அக்கறையாய் 
பஞ்சர் ஒட்டினாலும் 
அந்த வெற்றுடம்பில் 
ஆடையாய் 
அப்பி கிடக்கிறது 
ஆயிலும் கிரீசும்.

கடையில் தொங்கும் 
அட்டை சொல்லும் 
"குழந்தை தொழிலாளர் 
இங்கில்லை"-என்று. 

ஏக்கம்


ஐம்பதுபைசாவுக்கு 
அச்சு வெல்லம் 
இருபது பைசாவுக்கு 
எள்ளுருண்டை 
நாலணாவுக்கு 
நெல்லிகாய் 
வாங்கடா என் பேரனுங்களா 
நீங்கல்லாம் ஒழுங்கா 
பள்ளிகூடத்துக்கு வரணும், 
இந்த பாட்டிக்கிட்ட 
திங்கறதுக்கு வாங்கணும்..

மிட்டாயும் கேட்காமல் 
பள்ளி செல்ல வழியுமின்றி 
ஏக்கத்தோடு 
பார்த்துக்கொண்டிருக்கிறான் 
அந்த பாட்டியின் 
எட்டு வயது பேரன்.

வேறுபாடு


"வாசலில் நிற்காதே"
"பூமி நோக நடக்காதே"
"சத்தம் போட்டு சிரி்க்காதே"
"ஆண்களிடம் பேசாதே"
ஏனென்றால்
நீ வயசுக்கு வந்துட்ட.

கட்டளைகள் 
கேள்வி கேட்கிறது என்னை.

என் வயது 
எதிர்வீட்டு பையன் 
எங்கும் சென்று 
எப்போதும் வருகிறான் 
அவனுக்கில்லை 
கட்டளையும் காவலும்.

அவன் வரவில்லையா
வயசுக்கு..?


பொதுவில் வைப்போம்


பெண் பார்க்கும் 
அவலம் போய் 
ஆண் பார்க்கும் 
படலம் வேண்டும்

போய் கடிதம் 
போடாமல் 
நேரில் சொல்லவும் வேண்டும் 
நெஞ்சுரம்.

பொதுவில் வைப்போம் 
இரு வீட்டார்க்கும் 
புலம்பலை.

பெண்ணுக்கு 
மூன்று முடிச்சு எனில்.,
ஆணுக்கும் போடட்டும் 
ஒன்றேனும் சூடு.

ஆண் நடக்கையில் 
மெட்டி ஒலி 
இசைக்கட்டும்.

ஆணுக்கும் அதுவே 
இருக்கட்டும் 
முதலிரவாய்.

காலில் விழாமல் 
கை குலுக்கி 
அரவணைப்போம்.

கனிவு பேச்சு 
கட்டளை அதட்டல் 
மிடுக்கான மிரட்டல் 
அனுதாப பாராட்டல் 
இத்தனையும் இருக்கட்டும் 
இருவர்க்கும் பொதுவாய்.


ஆனாலும்..
கருத்தரிப்பும் 
பிரசவிப்பும் 
பெண்ணுக்கே நிலைக்கட்டும்.

தாய்மையின் பெருமையை 
தரவும் முடியாது 
அதை நீ 
பெறவும் முடியாது 
ஆண் மகனே.

விழியில் நனையும் உயிர்

காலை எழுந்தவுடன் படிப்பு -பின் 
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
பாரதி....
உன் கவிதையின் முதல் வரி 
மோசம் போனது 
அந்த பள்ளியின் 
மூன்றாம் மாடியில்.

தாயின் 
கருவறை சூடே 
இன்னும் காயாத 
மழலைகளை 
கரித்து போட்டது
கொளுந்து தீ.


பள்ளிக்கு கிளம்பிய 
காலையில் 
நீங்களிட்ட 
எச்சில் முத்தங்களின் ஈரம் 
தீ சுட்ட  
முத்திரை ஆனது 
தாய்மையின் கன்னத்தில்.

சிம்னி விளக்கும் 
சுட்டுவிடுமென 
சீண்ட விட்டதில்லையே உன்னை.,
தீ நாக்கு சுடத்தான் 
சிலேட்டு பையோடு 
போனாயோ பள்ளிக்கு..?
ஒரு குடிசையிலிருந்து 
காற்றில் கலக்கும் ஒப்பாரி.

முத்தம் அள்ளி தந்து..
கை அசைப்பில்கதை சொல்லி
விடைபெற்று போனீர்கள்..
விண்ணிலிருந்து 
கண்சிமிட்டும் 
விண்மீனாய் ஆனீர்கள்.

கூடி விளையாடத்தானே 
கூப்பிட்டான் பாரதி..
இப்படி 
கூடி எரிந்ததென்ன 
காவிய கண்மணிகள்.

தாய் மடி சூடும்
தாலாட்டு பாட்டும் 
பருப்பு சோறும் 
மழலையும் 
முத்து சிரிப்புமென 
மலரா மொட்டுக்களை 
வீட்டிலிருந்த்து 
பள்ளிக்கு அனுப்பினோம்..,
பள்ளியோ 
பாடைக்கு அனுப்பியது.

பொசுங்கிய 
பொக்கிஷத்தில்..
எத்தனை விஞ்ஞானிகள்..
எத்தனை மகாத்மாக்கள்..
எத்தனை தெரேசாக்களோ..
எவர் கண்டார்..?

இனியும் வேண்டாம் 
இப்படியொரு 
மீளாத்துயர்..,
ஆறாமலும்..
ஆற்ற முடியாமலும் 
வலியில் 
எம் நெஞ்சங்கள்.

மனசு

சாய்ந்தோடிய பேருந்தில் 
முதுகும் மூச்சும் 
உரச பயணித்தனர் மக்கள்,
நோயுற்ற குழந்ததையை 
நோகாமல் சுமந்த 
தாய் ஒருத்தி 
தன்னிலை கூறி 
அமர கேட்டாள் இடம்..,
சட்டென 
எழுந்த மூதாட்டிக்கு 
உடலில் ஒரு கால் 
கையில் மறுகால் 
ஊன்றுகோலாய்..! 



வெட்கம்

விழியில் விரிந்த
தொட்டால் சுருங்கியை 
நெருங்கி தொட்டு..
சுருங்கும் கணத்தில் 
அதனிடம் 
கிசுகிசுப்பாய் கேட்டேன்..
உனக்கென்ன
அவ்வ்வ்வ்வ்வ்வ்வளவு
வெட்கம்..?

இனியும் வேண்டுமா..?

வெள்ளம்..
பூகம்பம்..
சுனாமி...
இனக்கலவரம்..
அகதிகள்..
பிரச்சினை எதுவானாலும் 
அரசின் தீர்வு ஒன்றேதான்..,
பொட்டலச்சோறும் 
ஒரு முழந்துணியும்.

உன்னோடு


தன்னோடு 
தான் பேசும் 
என்னை, 
பைத்தியம் என்கிறார்கள்..
உன்னோடு 
நான் பேசும் 
உண்மை அறியாத 
பைத்தியங்கள்.

Recent Comments